காவியத்தாயின் இளைய மகன்
அழகிய கண்களுக்கு தாசன்।நான்!எனவே என் பெயரை கண்ணதாசன் என அமைத்துக் கொண்டேன் என்றார் கவிஞர் கண்ணதாசன். கலைமகள் அருளிய கவித்திறத்தால் காலம் கடந்து காவியமானார்.ஒவ்வெராரு மனிதனுடைய।வாழ்விலும் எல்லா சூழ்நிலைகளிலும் என் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்றார்.ஆம் கவிஞரே!வெறும் வரிகளா அவை? அத்தனைக் கவிதைகளும் அள்ளித்தெறித்த முத்துக்கள். நம் வீட்டு முற்றத்தில் எல்லாம் அவருடைய கவிதைகள் இறைந்து கிடக்கின்றன..."மனமகளே மனமகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா என்கிற வரிகள் ஒலிக்காத திருமண இல்லங்கள் உண்டா? துக்க வீட்டிலும் "வீடு வரை உறவு, வீதி வரை மனைவி..என்று மனதை தேற்றிக்கொள்ள வைத்தது அவரது வரிகள். ஆங்கில இலக்கிய உலகில் ஜொனாதன் ஸ்விஃட் என்கிற அறிஞர், பாடசாலைகளிலும் நூலகங்களிலும் மட்டுமே கிடைக்கப்பெற்ற அரிய கருத்துக்களை பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தித் தந்தார். கவியரசரை நான் தமிழ்நாட்டு ஸ்விஃட் என அழைக்க விழைகிறேன்,
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே" " "ஒருமடமாது ஒருவனுமாகி" போன்ற கரடுமுரடான பாக்களை பாமரனும் புரிந்துக் கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தித் தந்தார். பத்தாயிரம் வரிகளில் கம்பன் வரைந்த கம்பராமாயனத்தை இரண்டே வரிகளில் கூறிச்சென்றார்." கோடு போட்டு நிற்கச் சொன்னான் சீதை நிற்கவில்லையே, சீதை அன்று நின்றிருந்தால் இராமன் கதை இல்லையே"...வாழ்க்கையின் தத்துவத்தை பற்றி சிக்மன்ட் ப்ராய்டு என்பார் பல ஆராய்ச்சிகள் செய்தார். வாழ்க்கையின் சாராம்சத்தை இவ்வாறு கவிஞர் கூறுகிறார் "மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா".இதை விட வாழ்க்கையை பற்றி அழகாக எப்படி கூற முடியும் நண்பர்களே...எது கைக்கு கிடைக்கிறதோ அதை வைத்துக் கெண்டு எதுகையாக்குபவர் அல்ல அவர்.அவரே சொல்கிறார், ஓசை என்னுள் அடக்கம் என்று.தேமா புளிமா தெரிந்துக் கொண்டு எழுதுவது வேறு, அதை வைத்துக் கொண்டு எழுதுவது வேறு
"மாலையிட்ட மங்கை" என்கிற திரைக்காவியம்.வீரர்கள் போருக்கு போவது போன்ற ஒரு காட்சி.கவிஞர் அந்த சூழலுக்கு வசனம் தீட்டுகிறார் "இத்தனை பேர் போருக்கு போகிறார்களே! இவர்களில் யார் வருவார்? யார் மடிவார்? யார் அறிவார்?. போருக்கு சென்ற கணவன் நிலைகுறித்த கவலை வீட்டில் இருப்பவளுக்குத்தானே! போர் வீரனின் மனைவி கூறுவதாக ஒரு வசனம் "அவன் போருக்கு போனான், நான் போர்க்களம் ஆனேன்".கலங்காதிரு மனமே என்று தனது பாட்டுப் பயணத்தை தொடங்கினார்.கண்ணே கலைமானே என்று தன் பயணத்தை முடித்துக் கொண்டார். மூவாயித்து ஐநூறு கவிதைகள் எழுதிய சமயததில் கூறுகிறார்.."இந்த மூவாயித்து ஐநூறு பாடல்களில் ஐநூறு பாடல்கள் வேண்டுமானால் குப்பைகளாக இருக்கட்டும், மூவாயிரம் பாடல்கள் காலத்திற்கும் நிற்கும் என்றார்." நடைபாதை வணிகரென்று நான் கூவி விற்ற பொருள் நல்ல பொருள் இல்லை அதிகம் என்றார், கவிஞர் மறைவின் போது கலைஞர் எழுதுகிறார்" யார் கூப்பிட்டாலும் போய் விடுவாயே கண்ணதாசா! அழைப்பது யமன் என்று தெரிந்துமா போய்விட்டாய்! நிலையாத மனம் உனக்கு, ஆனால் நிலையான புகழ் உனக்கு" வலம்பரி ஜான் அவர்கள் தான் கவிஞரைப் பற்றி மிக அழகாக கூறுவார் "கவிஞர் கண்ணதாசன் இந்தியாவின் ஜனாதிபதியை போல சம்பாதிக்கிறார், ஆனால் இந்தியாவை போல கடன் வாங்குகிறார்" என்று. ஒரு கலைஞனுடைய வெற்றி என்பது அவனுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்பவர்கள் பாராட்டுவதில் அல்ல...அவன் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள இயலாதவர்கள் கூட அவனைக் கழித்து விட்டு கவிதை வரலாற்றை எழுத முடியாது என்று சொல்லும் நிலைபாட்டை ஏற்படுத்திச் சென்றமையில் தான் கண்ணதாசன் என்கிற கலைஞன் மிளிர்கிறான்....
கருத்துகள்
கருத்துரையிடுக